புதுடெல்லி: தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா (46). இவர் மீது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் எழுந்தது. இதனால், கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்த கவிதாவை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது.
அதனை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவை, ஏப்ரல் 11ம் தேதி சிபிஐ-யும் கைது செய்தது. இதனால் மதுபான கொள்கை முறைகேடு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகிய இரு வழக்குகள் கவிதா மீது பாய்ந்தன. தொடர்ந்து சிறையில் இருந்த வந்த அவர், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு குற்றச் சதியில் கவிதா முதன்மையானவர் என்றும், PMLA சட்டத்தில் பெண்களுக்கான ஆதாயப் பிரிவின்கீழ் ஒரு படித்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்க உரிமை இல்லை கூறி கவிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து கவிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. கவிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கவிதாவுக்கு எதிரான விசாரணையை ஏற்கனவே இரு ஏஜென்சிகளும் முடித்துவிட்டன. அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கில் ஐந்து மாதங்களாகவும், சிபிஐ வழக்கில் நான்கு மாதங்களுக்கும் மேலாகவும் கவிதா காவலில் இருந்து வருகிறார்.
மேலும், இதே வழக்குகளில் மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜாமீன் வழங்கிய தீர்ப்பையும் முகுல் ரோத்தகி மேற்கோள் காட்டி கவிதாவுக்கு ஜாமீன் கோரினார்.
அப்போது, விசாரணை முகமைகள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கவிதா தனது செல்ஃபோனில் இருந்த தரவுகளை அழித்துவிட்டார் என்றும் அவரது நடவடிக்கைகள் ஆதாரங்களை சேதப்படுத்துவதாகவும் கூறி ஜாமீனுக்கு எதிராக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணையின் நோக்கத்திற்காக மனுதாரர் காவலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணை நிறைவடைந்துவிட்டது என தெரிவித்த நீதிபதிகள், முந்தைய ஜாமீன் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
மேலும், இரண்டு வழக்குகளிலும் தலா ரூ.10 லட்சம் ஜாமீன் பத்திரத்தை வழங்க வேண்டும். கவிதாவின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சொல்லி, சாட்சிகளை சேதப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்று தெரிவித்து கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இடிந்து விழுந்த சத்ரபதி சிவாஜி சிலை.. ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!