டெல்லி: தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை மட்டுமே இயக்க அனுமதி உள்ளது. இந்நிலையில், இச்சட்டப்படி தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்பட வேண்டும். ஆனால் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய விதிமீறலால், தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும்; ஆகவே, வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டிற்குள் இயக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 'தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் வெளி மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கேரளா அண்டை மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கும் நிலையில், இதற்காக தமிழ்நாட்டின் வழியாக செல்ல வேண்டியுள்ளது' எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதேபோன்ற நடவடிக்கைகளில், டிசம்பர் 15, 2023 அன்று உச்ச நீதிமன்றம் தென் மாநிலத்தில் மறு பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ளாமல், தமிழகத்தில் பேருந்து நடத்துநர்கள் தங்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தது என்று மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதோடு, தமிழ்நாடு அரசின் உத்தரவுகள் மோட்டார் வாகனச் சட்டம், 1988 (எம்.வி.ஏ) பிரிவு 46-க்கு முரணானது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையால் ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நடத்துநர்கள், அத்தகைய வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மாநிலத்திற்குள் தங்களது வாகனங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்டனர். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய டூரிஸ்ட் பெர்மிட் (ஏ.ஐ.டி.பி.) வைத்துள்ள வாகனங்கள் எந்தத் தடையும் இன்றி தமிழ்நாடு வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்! - Kallakuruchi NHRC notice to TN Govt