கஸ்கஞ்ச்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு எழுத்துத்தேர்வு நேற்று(பிப்.17) நடைபெற்றது. இந்த ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்துத்தேர்வு 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.
இதில், அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தேர்வெழுத வந்த நபர் ஒருவரின் அனுமதிச் சீட்டில் தவறுதலாக பாலிவுட் நடிகை சன்னிலியோன் பெயரும், புகைப்படமும் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், அனுமதிச்சீட்டில் சன்னி லியோன் தேர்வு மையம் ஸ்ரீமதி கன்னோஜ் திர்வா தாலுகாவில் உள்ள சோனஸ்ரீ நினைவு பெண்கள் கல்லூரி எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக கன்னாஜ் சைபர் செல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை ஆராய்ந்து பார்க்கையில் போலீசார் போலியானது என உறுதிப்படுத்தினர். அந்த அனுமதிச்சீட்டில் நிரந்தர முகவரி மும்பை எனவும், தற்போதைய முகவரி கஸ்கஞ்ச் எனவும், குறியீடு எண் 210423, தந்தை பெயர் ஜோர்ஜி, தாயார் பெயர் தர்மி எனவும், ஆதார் எண் '3513 3467 3887' எனவும் அச்சிடப்பட்டிருந்தது. சில நபர்களின் தவறான செயலே இந்த குழப்பத்திற்குக் காரணம் என போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: வானிலை மாற்றத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய இன்சாட் 3டிஎஸ்.. விண்ணில் சீறிப்பாய்ந்தது..!