போபால்: மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி 66 இடங்களை மற்றும் கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. தேர்தல் தோல்வியை அடுத்து மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமல்படுத்தினார்.
அதன்படி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் எதிர்வரும் மக்களவை தேர்தலில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத்திற்கு இடம் மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கூடுதலாக அதிருப்தி அடைந்த கமல்நாத், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜகவில் இணைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கமல்நாத்தை தொடர்ந்து அவரது மகனும் எம்.பியுமான நகுல் நாத்துடம் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் முகாமிட்டு உள்ள கமல்நாத் மற்றும் நகுல் நாத் பாஜக மூத்த தலைவர்களுடன் கட்சித் தாவல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச காங்கிரசில் கமல்நாத் தரப்புக்கு ஏறத்தாழ 23 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் கமல்நாத் தலைமையில் அனைவரும் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
முதற்கட்டமாக கமல்நாத் தலைமையில் 11க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக மாநிலத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.
கமல்நாத் ஆதரவாளர் விக்ரம் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். மற்றொரு முன்னாள் எம்.பி தீபக் சக்சேனா, கமல்நாத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். இதனிடையே கமல்நாத் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய இயலாது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சித் தாவலில் ஈடுபடும் போது அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராகேஷ் பாண்டே தெரிவித்து உள்ளார். இதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேசியவாத காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? சரத் பவாரின் அடுத்த நகர்வு என்ன? உச்ச நீதிமன்றம் விசாரணை!