ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரியில் இருந்து ஜூன் வரை) அதிக சாலை விபத்துகள் பதிவாகியிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரியில் தொடங்கி கடந்த ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 2,864 விபத்துகள் நடந்திருப்பதாகவும், அதில் 417 பேர் பலியாகி 3,894 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜம்மு மாவட்டத்தில் மட்டுமே கடந்த ஆறு மாதங்களில் அதிக விபத்துகள் மற்றும் இறப்புகள் பதிவாகியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை மொத்தம் 537 விபத்துகளில் 75 பேர் இறந்துள்ளார்கள் என்றும் 750 பேர் காயம் அடைந்தார்கள் என்று தெரிவிக்கிறது.
ஜம்முவிற்கு அடுத்தபடியாக உதம்பூரில் 228 விபத்துக்களுடன், 47 இறப்புகள் மற்றும் 314 பேர் காயம் அடைந்துள்ளனர். குறைந்த பட்சமாக ஷோபியானில் மொத்தம் 30 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் இரண்டு பேர் உயிரிழந்து 52 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே மாதத்தில், 546 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஜனவரியில் 398 விபத்துகள் நடந்து 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
பொதுவாகவே ஜம்மு, உதம்பூர் மற்றும் கதுவா ஆகியவை சாலை விபத்துகள் அதிகமாக நடக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து நெரிசல், மோசமான சாலை மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, பொறுப்புடன் வாகனம் ஓட்டுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்'' என தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்துகளை தவிர்க்க ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2023 ஆம் ஆண்டில், 6,298 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 893 பேர் உயிரிழந்துள்ளனர். 8,469 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய பெண்.. 30 மணி நேரம் திகில்.. நடந்தது என்ன?