மும்பை: இந்திய பொருளாதாரத்தின் தூண்களின் ஒன்றாக அனைவராலும் போற்றப்படும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று முந்தினம் (அக்.9) இரவு காலமானார். இந்திய தொழில்துறையில் சிறந்து விளங்கிய ரத்தன் டாடாவின் இறப்பு, இந்திய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரத்தன் டாடா தொழில் அதிபர் மட்டுமல்ல. சமூக சேவை நிறைந்த மனிதர். தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக நிகழ்ந்த ரத்தன் டாடா தனது வருமானத்தில் கிடைக்கும் பாதி பணத்தை அறக்கட்டளைகளுக்கு பயன்படுத்தி உள்ளார். செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவராகவும் ரத்தன் டாடா திகழ்ந்துள்ளார். ரத்தன் டாடா ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் கோல்டன் ரிட்ரைவர் நாய்களை வளர்த்து வந்தார்.
அவை இறந்த போது மிகவும் வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் தெரு நாய்களையும் தத்தெடுத்து அவற்றை அரவணைப்புடன் வளர்த்துள்ளார். செல்லப்பிராணிகளுக்காக மும்பையில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனை கட்டியுள்ளார். ரத்தன் டாடாவின் மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மறைவு அவர் வளர்த்த செல்ல நாயையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாடாவின் மறைவைக் கண்டு கலங்கிய நாய்: ரத்தன் டாடாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA -National Centre for Performing Arts) வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவரின் வளர்ப்பு நாய் கோவா அங்கு அழைத்து வரப்பட்டு அஞ்சலி செலுத்தியது. அதன் பின் அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சோகமாகவும், அவ்விடத்தை அகலாமலும் இருந்துள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவா நாயை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த செல்லப்பிராணி பராமரிப்பாளர் கோவா, ரத்தன் டாடாவிற்கு நெருக்கமான செல்லப்பிராணி என்றும், கோவா காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. அதனை விடுமாறும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரத்தன் டாடாவின் காதல் கதைகள்.. பலரும் அறியாத டாடாவின் மறுபக்கம்!
வளர்ப்பு நாய் கோவா: சில ஆண்டுகளுக்கு முன் ரத்தன் டாடா கோவா சென்றிருந்த போது, தெரு நாய் ஒன்று அவரை பின் தொடர்ந்து வந்துள்ளது. அதனைக் கண்ட ரத்தன் டாடா, அந்த நாயை தத்தெடுத்து மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். அந்த நாயை கோவாவில் கண்டுபிடித்ததால், அதற்கு கோவா எனப்பெயரிட்டு டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான மும்பை ஹவுசில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.
#WATCH | Visuals of Ratan Tata's dog, Goa outside NCPA lawns, in Mumbai where the mortal remains of Ratan Tata were kept for the public to pay their last respects. pic.twitter.com/eVpxssjpLa
— ANI (@ANI) October 10, 2024
கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவளியை பாம்பே ஹவுஸ் உள்ள தத்தெடுக்கப்பட்ட நாய்களுடன் குறிப்பாக கோவாவுடன் கொண்டாடியதாக ரத்தன் டாடா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே, டாடாவின் தாஜ் மகால் ஹோட்டலாக இருந்தாலும் சரி, டாடா குழுமத்தின் தலைமை அலுவலகத்திலும் இருந்தாலும் சரி கைவிடப்பட்ட தெருநாய்களுக்கு எப்போதும் வரவேற்கப்படுகின்றன என கூறினார்.
வளர்ப்பு நாய்க்காக விருதையும் புறக்கணித்தவர்: கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய - ஆசிய அமைப்பு சார்பில் ரத்தன் டாடாவிற்கு விருது வழங்க தற்போதைய இங்கிலாந்து மன்னரும், அப்போதைய இளவரசருமான மூன்றாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்தார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற இருந்த இவ்விருது விழாவிற்கு வருவதற்கு ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டார்.
அவர் அங்கு கிளம்பும் வேளையில் அவரது வளர்ப்பு நாய் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவ்விழாவிற்கு ரத்தன் டாடா செல்லவில்லை. நாய்க்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தினார்.