ஆந்திரா: ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரான ராமோஜி ராவின் ஏழரை அடி சிலையை கோனசீமா மாவட்டம், கொத்தப்பேட்டையில் பிரபல சிற்பி ராஜகுமார் உடையார் வடிவமைத்து வருகிறார். தற்போது சிலைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ், கடந்த ஜூன் 8ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஜூன் 9ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈநாடு பத்திரிகை, ஈடிவி டெலிவிஷன் மற்றும் ஈடிவி பாரத் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடங்கி ஊடக உலகிற்கு பல்வேறு தொண்டுகளைச் செய்த ராமோஜி ராவிற்கு சிலை செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார் விஜயநகரம் எம்.பி காளிசெட்டி அப்பலா நாயுடு.
இதற்காக ஆந்திர மாநிலத்தின் பிரபலமான சிற்பியான ராஜகுமார் உடையாரை அணுகியுள்ளார். இதனையடுத்து, தற்போது சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சிற்பி ராஜகுமார் கூறுகையில், “விஜயநகரம் எம்.பி காளிசெட்டி அப்பலா நாயுடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ராமோஜி ராவின் சிலையை வடிவமைத்து வருகிறேன். முன்னதாக அவரின் பல்வேறு புகைப்படங்களைப் பார்த்த பின்னரே இந்த பணியைத் தொடங்கினேன். இன்னும் சில நாட்களில் சிலை முழு வடிவம் பெறும்” என்றார்.
தொடர்ந்து எம்.பி காளிசெட்டி அப்பலா கூறுகையில், "ராமோஜியின் உணர்வை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தற்போது சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையின் அடையாளமாக, இந்த சிலைகள் இருக்க வேண்டும். மேலும் 'ஈநாடு' பிறந்த இடமான விசாகப்பட்டினத்தில் முதல் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இரண்டாவது சிலை ஸ்ரீகாகுளம் மாவட்டம், ரணஸ்தலத்தில் உள்ள சாய் கல்லூரி வளாகத்தில் நிறுவப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பவன் கல்யாண் துணை முதலமைச்சர்.. ஆந்திர அமைச்சரவை இலாகா பட்டியல்.. முழு விவரம்!