டெல்லி: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், சில நபர்களைத் தேடும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், பெங்களூரு காவல்துறையினரும் தீவரம் காட்டி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், பல்வேறு புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கர்நாடகாவில் 12 இடங்களிலும், தமிழ்நாட்டில் 5 இடங்களிலும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 1 இடத்திலும் என மொத்தமாக 18 இடங்களில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை குழுக்கள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை நேற்று (மார்ச் 27) கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 18 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து, முஸம்மில் ஷரீப் என்பவர் கைது செய்யப்பட்டு, துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முசாவிர் ஷசீப் ஹுசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவருக்கும், தற்போது கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டுள்ள முஸம்மில் ஷரீப் ஆதரவு வழங்கியதாக என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்த வழக்கை மார்ச் 3ஆம் தேதி என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதனை அடுத்து, குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஷசீப் ஹுசைனையும் மற்றும் வேறு சில வழக்குகளில் ஏஜென்சியால் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் தாஹாவையும் முன்னதாகவே என்ஐஏ அடையாளம் கண்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், குற்றவாளிகள் மூன்று பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சம்மந்தப்பட்ட இடங்கள் அனைத்திலும் இன்று (மார்ச் 28) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் பிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து: பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது வழக்குப்பதிவு!