டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து நீடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளார். இடைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18வது மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளிலும் 5 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி அபார் வெற்றி பெற்றார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் இரண்டிலும் வெற்றி பெறும்பட்சத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்த 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் அவர் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததாக கருதப்படும்.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நாளைக்குள் (ஜூன்.18) ரேபரேலியா அல்லது வயநாடா என இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய கட்டாயத்திற்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டார். இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து நீடிக்கவும், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யவும் ராகுல் காந்தி முடிவெடுத்து அறிவித்து உள்ளார்.
அதன்படி வயநாடு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் முதல் முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு வங்கம் கன்சன்ஜங்கா ரயில் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - West Bengal train accident