டெல்லி: மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலை முன்பாக ஜூலை மாதம் அங்கு நடைபெறும் பந்தர்பூர் யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மகாரஷ்டிர மாநில சடப் பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி, சிவ சேனா உத்தவ் தாக்ரே அணிகள் இணைந்த மகா விகாஷ் அகாதி கூட்டணி கூட்டாக இணைந்து 30 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு பெரும் அடியை கொடுத்தது. இதில் காங்கிரஸ் மட்டும் முழுமையாக 13 இடங்களில் வெற்றி கண்டது.
உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பாஜக பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக 17 இடங்களை மட்டுமே வென்றது. இந்நிலையில், ஜூலை மாதம் நடபெற உள்ள பந்தர்பூர் யாத்திரையின் மூலம் மாநிலத்தின் ஆளும் பாஜக- தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணியை வீழ்த்த மகா விகாஷ் அகாதி கூட்டணி திட்டமிட்டுள்ளது.
பந்தர்பூர் யாத்திரை மூலம் மகாராஷ்டிரா வாக்காளர்களை எளிதில் அணுகுவதற்கான யுக்தியாக மாநில காகிரஸ் தலைமை கருதுகிறது. அதன்படி ஜூலை மாதம் நடைபெறும் பந்தர்பூர் யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார் எனத் தகவல் கூறப்படுகிறது.
வித்தோபாவை கவுரவிக்கும் விதமாக நடைபெறும் இந்த யாத்திரையில் ஜூலை 13ஆம் தேதி ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி மகாராஷ்டிர மாநில அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என்றும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாநில பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாநிலங்களவை அவைத் தலைவராக ஜேபி நட்டா நியமனம்! - JP Nadda