புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமி கொலை தொடர்பாகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC) தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மா தலைமையில் ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை இயக்குநர் இளங்கோவன் அடங்கிய குழுவினர், சிறுமிக்குப் பிரேதப் பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் ஆகிய இடங்களில் நேரில் விசாரணை நடத்தினர்.
ஜிப்மரில் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும், முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசாரிடமும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சம்பவங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.
பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்த உடனேயே இங்கு வந்தோம். காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பிரேதப் பரிசோதனை, டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம்.
அவர்களும் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களும், சிறுமி கொலைச் சம்பவத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தான் நடக்கும். குற்றவாளிகள் தப்பிக்காதவாறு காவல்துறை அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருள்கள் நடமாட்டம் இருந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளோம்.
போதைப் பழக்கம் உள்ளவர்கள் குறித்து போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கத் தாய்மார்கள் அறிவுறுத்துவதோடு, அவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வரும் திங்கட்கிழமை ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்படவுள்ளது.
பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்களுக்குக் கிடைத்தது நாள்பட்ட மாதிரி. 24 மணி நேரத்தில் அந்த மாதிரி கிடைத்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கண்டறிய எளிதாக இருக்கும். பெற்றோர்களின் ரத்தத்தை வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். டிஎன்ஏ அறிக்கை இன்னும் அவர்கள் கொடுக்கவில்லை.
அதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் நாங்கள் தான் செய்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆகவே அவர்கள் தான் குற்றவாளிகள். மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தடயங்களை வைத்துத் தொடர் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளோம் அதனைச் செய்து வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது. தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக உள்ளது. இது தான் கடைசியான நிகழ்வாக இருக்க வேண்டும். சிறுமி கொலைக்குச் சம்பந்தமான குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் என்னுடைய இதயமும் கனத்துப்போய்வுள்ளது.
சிறுமியின் பெற்றோர் எங்களிடம் எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை. நாங்கள் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய உறுதுணையாக இருப்பதாகக் கூறியுள்ளோம். அவர்களுக்குச் சட்டப்படி வேலை வாய்ப்பு, பென்ஷன் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம். அதனை அரசு மேற்கொள்ளும். காவல்துறை, அரசின் நடவடிக்கையில் எங்களுக்குத் திருப்திகரமாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!