கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவனை வளாகத்துக்குள் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.
பிரேதப் பரிசோதனையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என தெரிய வந்ததை அடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், காவல்துறையின் நடவடிக்கையில் பல்வேறு குளறுபடி இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்த சிபிஐ, அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை (பாலிகிராப் சோதனை) நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி, கைதாகியிருக்கும் சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த மருத்துவர்கள் நான்கு பேர் மற்றும் ஒரு தன்னார்வலர் என ஏழு பேரிடம் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் முக்கிய நபரான சஞ்சய் ராயிடம் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக பாலிகிராப் சோதனையானது, கைது செய்யப்பட்டுள்ள நபர் பொய் பேசுகிறாரா என்பதை உளவியல் மற்றும் உடல் ரீதியாக நடக்கும் மாற்றங்களை வைத்து கண்டறியப்படும் அறிவியல் பூர்வமான நடைமுறை ஆகும். அந்த வகையில், தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரிடம் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: '30 வருஷத்தில் இப்படி ஒரு வழக்கை சந்தித்ததே இல்லை'.. - உச்ச நீதிமன்ற நீதிபதி!