ஹைதராபாத் / தெலங்கானா: ஹைதராபாத் ஹயாத்நகரில் 108 அவசர சிகிச்சை வாகனத்தை திருடிச்சென்ற நபரை திரைப்படத்தை மிஞ்சும் பாணியில் பல்வேறு தடைகளுக்கு பிறகு, காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடைத்த காவல் அலுவலர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், ஹயாத்நகரில் 108 அவசர ஊர்தியை (ஆம்புலன்ஸ்), நிறுத்தி விட்டு அருகில் இருந்த டீ கடைக்கு ஓட்டுநர் சென்றுள்ளார். அப்போது, ஓட்டுநருக்குத் தெரியாமல் ஒருவர் ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நடந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
களத்தில் இறங்கிய போலீஸ்:
உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை, ஆம்புலன்ஸைத் திருடிச்சென்ற நபரை போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) உதவியுடன் நோட்டமிட்டனர். இதில், 108 ஆம்புலன்ஸ் ஹைதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், விஜயவாடா நோக்கி சென்றுக்கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, சூரியபேட்டில் இருந்து விஜயவாடா வரை உள்ள சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆம்புலன்ஸை நிறுத்த முயற்சி செய்தனர்.
காவல் அலுவலர் மீது மோதிய ஆம்புலன்ஸ்:
ஆனால், ஆம்புலன்ஸ் சைரனுடன் அலறியபடி காவல்துறையினர் விரித்த வலையில் சிக்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதில், ஆம்புலன்ஸை நிறுத்த முயன்ற காவல் அலுவலர் ஜான் ரெட்டி மீது வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, வாகனத்தை திருடிச் சென்றவரை கேத்தேபள்ளி மண்டலம் கோர்லா பஹத் சுங்கச்சாவடியில் வைத்து மடக்கி பிடிக்க முற்பட்டபோது, தடுப்புகளை மோதித்தள்ளி அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றுள்ளார்.
பல்வேறு வழக்குகள்:
இதனையடுத்து, சூர்யபேட் மண்டலத்தில் உள்ள தேக்குமட்லா சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி திருடனைப் பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். ஆனால், அதிலும் சிக்காமல் தப்பிச் செல்ல முயன்ற நபர், 108 ஆம்புலன்ஸை தடுப்புகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இதில், காயமடைந்த நபரை கைது செய்த காவல்துறையினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதனையடுத்து, 108 ஆம்புலன்ஸை திருடியதற்கான காரணம் கேட்டு விசாரணை நடத்தினர். அதில், இந்நபர் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸை திருடிச் சென்றுள்ள சம்பவமும், அதை காவல்துறையினர் துரத்திச் சென்ற காட்சிகளும் அப்பகுதியில் சிறிது நேரம் பதைபதைப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.