டெல்லி: அடுத்த வாரம் பிரதமர் மோடி ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.
ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷ்யாவிலும் 10ஆம் தேதி ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.
இரு நாட்டு தலைவர்கள் ரஷ்யா - இந்தியா இடையிலான இருதரப்பு உறவு, சர்வதேச அளவிலான பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், பொருளாதாரம், இயற்கை எரிவாயு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது ஆண்டாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுற்றுப்பயணத்தின் இடையே ரஷ்யாவில் வாழும் இந்தியர்களை சந்திக்கும் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். ரஷ்ய பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார்.
ஏறத்தாழ 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரிய பயணத்தில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெட் பெலனை, பிரதமர் மோடி சந்திக்கிறார். தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் கார்ல் நெஹாம்மரை சந்திக்கும் பிரதமர் மோடி இருவரும் இந்தியா ஆஸ்திரியா வணிக தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடியின் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் பயணங்கள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 6 பேர் கைது! முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு- போலீசார் தகவல்! - Hathras Stampede