டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 8ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்றுக் கொள்வார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பன முடிவு செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 303 இடங்களை பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் கைகளை எதிர்நோக்கி உள்ளது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதன் காரணமாகவே கேபினட் அமைச்சர், சபாநாயகர் பதவி உள்பட பல்வேறு கோரிக்கைள் கூட்டணி கட்சிகளிடையே இருந்து பாஜகவுக்கு நெருக்கடியாக அமைவதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற 17வது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆட்சியை கலைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து குடியரசு தலைவரை சந்தித்த பிரதமர் மோடி தனது ரஜினாமா கடிதத்தை வழங்கினார். பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, புதிய அரசு அமையும் வரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதவியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து டெல்லியில் வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி 243 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
இதையும் படிங்க: சீனா விசா முறைகேடு வழக்கு: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு! - Chinese Visa Scam Karti Chidambaram