டெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று (மே.15) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன. சொந்தமாக கார், வீடு இல்லை இருப்பினும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வைத்து இருப்பதாக பிரதமர் மோடி பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2 கோடியே 86 லட்ச ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை, ரொக்கமாக 52 ஆயிரத்து 920 ரூபாய் ரொக்கம், காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் 80 ஆயிரத்து 304 ரூபாய் டெபாசிட், தேசிய சேமிப்பு சான்றிதழில் 9 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் முதலீடு, 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 45 கிராம் எடை கொண்ட நான்கு தங்க மோதிரங்கள் வைத்திருப்பதாக பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனக்கு சொந்தமாக வீடு, கார், பங்குச் சந்தையில் பங்குகள், மியூச்சுல் பண்ட் உள்ளிட்ட முதலீடுகள் எதுவும் இல்லை என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில், கடந்த 1967ஆம் ஆண்டு எஸ்எஸ்சி பயின்ற நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் பிரதமர் மோடி பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தனது சொத்து மதிப்பாக 2 கோடியே 50 லட்ச ரூபாயை பிரதமர் மோடி கணக்கு காட்டியுள்ளார். இதில் குஜராத்தில் உள்ள குடியிருப்பு பிளாட், வங்கியில் 1 கோடியே 27 லட்ச ரூபாய் வைப்புத் தொகை, 38 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 1 கோடியே 65 லட்ச ரூபாய் சொத்து வைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2018-19 ஆண்டில் 11 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக இருந்த பிரதமரின் வருமானம், 2022-23 ஆண்டில் 23 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட வகையில் இணையதளம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - மத்திய அரசு! - LTTE Ban Extended For Five Years