வயநாடு: கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12வது நாளாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்த நிலையில், 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் மேலும் 138 பேர் காணாமல் போன நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று (ஆக.10) வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு தரையிறங்கும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi conducts an aerial survey of the landslide-affected area in Wayanad
— ANI (@ANI) August 10, 2024
CM Pinarayi Vijayan is accompanying him
(Source: DD News) pic.twitter.com/RFfYpmK7MJ
மதியம் 12.15 மணி அளவில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார். தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவை தொடர்ந்து மாநிலத்திற்கு பல முக்கிய நிவாரண அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதேநேரம் தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு வயநாடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கல்பேட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: 17 மாதங்கள் கழித்து.. மதுபான கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்..! - Manish Sisodia Bail