வாரணாசி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன்.4) நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார். அங்கு காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதலில் பின்தங்கி காணப்பட்ட பிரதமர் மோடி தற்போது முன்னிலை பெற்று உள்ளார்.
தற்போது வரை பிரதமர் மோடி 1 லட்சத்து 34 ஆயிரத்து 128 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜெய் ராய் 93 ஆயிரத்து 222 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜெய் ராயை விட 40 ஆயிரத்து 906 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி அங்கிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜக தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரிஸ், சமாஜ்வாதி கட்சிகளின் இந்தியா கூட்டணி 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
ரேபரரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 1 லட்சத்து 33 ஆயிரத்து 307 வாக்குகள் இதுவரை பெற்று மற்ற வேட்பாளர்களை விட 68 ஆயிரத்து 789 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கோட்டையான அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி ராணி தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் 86 ஆயிரத்து 366 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி ராணியை காட்டிலும் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் 24 ஆயிரத்து 512 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
இதையும் படிங்க: LIVE: பிரதமர் மோடி பின்னடைவு! - Lok Sabha Election Results 2024