டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி முனைப்பை தொடும் நோக்கில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் உள்ளிட்ட 195 பேர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்த தேர்தலுக்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறும் முயற்சியிலும் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை தடை செய்த நிலையில், வேறு வழிகளில் நன்கொடையைப் பெறும் முயற்சிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
பாஜக சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் நன்கொடை பிரச்சாரத்தை கடந்த 1ஆம் தேதி அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா 1,000 ரூபாய் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாஜகவிற்கு 2,000 ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜகவிற்கு நன்கொடை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியை வலுப்படுத்துகிறேன். நமோ ஆப் மூலம் இந்த நன்கொடை பிரச்சாரத்துடன் அனைவரும் இணைந்து முடிந்த நன்கொடையைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி; ஷர்துல் தாக்கூர் சதம்.. வலுவான நிலையில் மும்பை அணி!