ராய்ப்பூர்: கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சுதந்திர விழாவில் கொடியேற்றப்பட்டு, சமாதான புறா பறக்கவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் சத்தீஸ்கர் மாவட்டம் முங்கேலி மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான புன்னுலால் மோலே தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முங்கேலி மாவட்ட ஆட்சியர் ராகுல் டியோ, காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
छत्तीसगढ़ में पंचायत–3 रिपीट हो गई। स्वतंत्रता दिवस पर SP साहब कबूतर उड़ा रहे थे। उनका कबूतर उड़ने की बजाय नीचे गिर गया। Video देखिए... pic.twitter.com/R9Vui9BC3p
— Sachin Gupta (@SachinGuptaUP) August 19, 2024
அந்நிகழ்ச்சியில் கொடியேற்றத்திற்கு பிறகு, அமைதி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாக முன்னாள் அமைச்சர் புன்னுலால் மோலே, மாவட்ட ஆட்சியர் ராகுல் டியோ, காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் வெள்ளை புறாக்களை பறக்க விட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்ட புறாக்கள் வானத்தை நோக்கி பறந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் பறக்கவிட்ட புறா மேலே பறக்காமல் தரையை நோக்கி கீழே விழுந்தது.
இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிகழ்வு தொடர்பாக X வலைதளத்தில் சச்சின் குப்தா என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து, "பஞ்சாயத் 3 திரும்பவும் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது எஸ்.பி பறக்கவிட்ட புறா தரையில் விழுந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் கடிதம் எழுதியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கடிதத்தில், சுதந்திர தின விழா போன்ற முக்கிய விழாவின் போது பறக்கவிட்ட புறா தரையில் விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இவ்விழாவில் நோய்வாய்ப்பட்ட புறாவை பறக்கவிட வைத்ததன் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழாவில் தலைமை விருந்தினர் அல்லது மாவட்ட ஆட்சியர் கையால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால், நிலைமை விரும்பத்தகாததாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புறா தற்போது உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து - முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு! - upsc lateral entry plan