பெங்களூரு: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய பட்டியலின மக்கள் நடவடிக்கை கமிட்டி தலைவர் சி.நா.ராமு மற்றும் தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் சுசீலா தேவராஜ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ''நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி கடந்த மே 2ஆம் தேதி கர்நாடகாவின் ஷிமோகாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோ எடுத்தார். அப்படிப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.
மேலும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களுக்கு அவமானத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி அரசியல் சாசனத்துக்கு எதிரான பேச்சுக்காக ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும். பொது நம்பிக்கைக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அரசியலமைப்பு விதிகளை மீறுதல் போன்ற குற்றங்களுக்காக அடையாள தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையம், மாநில உள்துறை மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் பேச்சு குறிப்பாக, ஹாசன் தரப்பு பெண்களின் கண்ணியத்திற்கு கேடு விளைவித்துள்ளது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி மக்களிடம் வாக்குகளை பெறுகின்றனர். இந்திய பெண்களின் கண்ணியத்துக்கு கேடு விளைவித்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்னும் திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்!