டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நிறைவு பெற்றது. இதையடுத்து, இன்று (ஜூன் 4) மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரவு 9 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "பாஜக மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. அதேபோல், தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கும் நன்றி.
வடக்கு முதல் தெற்குவரை பாஜக மீது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் மீதும், மோடியின் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனது தாயார் மறைவுக்குப் பிறகு நான் சந்தித்த முதல் தேர்தல் இது.
2019ஆம் ஆண்டு பாஜக மீது மக்கள் வைத்து இருந்த நம்பிக்கையை 2024-ல் காப்பாற்றியுள்ளோம். இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. பாஜகவை வெற்றி பெற வைத்த ஒடிசா மக்களுக்கு நன்றி. டெல்லி, இமாச்சல் மற்றும் குஜராத் மக்கள் எங்களை முழுமையாக ஆதரிக்கின்றனர்" எனப் பேசினார். இந்த நிகழ்வின் போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக இது குறித்து பிரதமர் மோடி தனது எஸ்க் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,"மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சாதனை. இந்த பாசத்திற்காக நான் தலைவணங்குவதுடன், கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராதிகா சரத்குமார் முதல் ராமர் கதாபாத்திர நடிகர் வரை.. 2024 மக்களவைத் தேர்தலில் கவனம் ஈர்த்த திரைப்பிரபலங்கள்!