ஸ்ரீநகர் : முன்னாள் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. மெஹபூபா முப்தியின் இந்த திடீர் அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு புது பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பெருவாரிய கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இறுதி கட்டத்தை எட்டி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா அறிவித்து உள்ளார்.
மேலும், ஜம்முவில் உள்ள இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு தேசிய மாநாட்டு கட்சி ஒதுக்கி உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி, மக்களவை தேர்தலில் அவரது மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய மெஹபூபா முப்தி, "மக்களவை தேர்தலில் போடியிட்டும் திட்டமே தங்களுக்கு இல்லை. பரூக் அப்துல்லா தலைமையில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவே திட்டமிட்டு இருந்தோம். அது குறித்து அவரிடமும், அவரது மகன் உமர் அப்துல்லாவிடமும் பேசினோம். ஆனால் ஜம்மு காஷ்மீரில் பிடிபி எனும் கட்சி இல்லை. அதை எங்கும் காண முடியவில்லை என உமர் அப்துல்லா கூறியது எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
பிடிபி கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் தொண்டர்களின் மனதை உமர் அப்துல்லா காயப்படுத்தி விட்டார். கட்சித் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம்" என்று மெஹபூபா முப்தி தெரிவித்தார். அதேநேரம் இதுகுறித்து பேசிய உமர் அப்துல்லா, மக்களவை தேர்தலில் போட்டியிடுவது என்பது பிடிபியின் தனிப்பட்ட முடிவு என்றும், அவரது பார்முலா அடிப்படையில் காஷ்மீரில் 3 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
மெஹபூபா முப்தியின் இந்த திடீர் அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளில் ஐந்து கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி உதாம்பூரிலும், ஜம்முவில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மே 7ஆம் தேதி அனந்த்நாக் - ரஜோரியிலும், ஸ்ரீநகரில் மே 13ஆம் தேதியும், மே 20ஆம் தேதி பாரமுல்லாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிங்க : மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை! எங்கெங்கு செல்கிறார்? என்னென்ன செய்கிறார்? - Amit Shah Visit On Tamil Nadu