குப்வாரா: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் காட்டுப்பாடுக் கோடு அருகே பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்பட நான்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் சேர்த்து அந்நாட்டின் எல்லை அதிரடி படையின் குழுவும், பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணிபுரியும் எஸ்எஸ்ஜி கமாண்டோக்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறப்படுகிறது. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் மேஜர் அந்தஸ்திலான அதிகாரி உள்ள 5 வீரர்கள் படுகாயம் அடைந்ததகாவும், அவர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேஜர் உள்பட நான்கு வீரர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லைக் கட்டுப்பாடு பகுதியை ஒட்டிய கமகரி, மச்சல் பிரிவுகளில் முதலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக ஜம்மு பகுதியில் தொடர் பயங்கரவாத துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கத்துவா, தோடா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்? ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? - PM Modi To Visit Ukraine Next Month