ஜெய்சல்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள ராணுவம் முகாமில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் இளைஞர் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விசாரணையில் ஈடுபட்ட ராணுவ புலனாய்வு அதிகாரிகள், ராணுவ முகாமில் பணியாற்றி வந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர்.
இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மனு கேஸ்ட் பில் என்றும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பவல்பூர் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், அந்த இளைஞர் கடந்த 2014ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்ததாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் ராணுவ முகாமில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இளைஞரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில் பாகிஸ்தானில் உள்ள தனது உறவினர்களுடன் அவர் தொடந்து தொடர்பில் இருப்பது தெரியவந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ராணுவ முகாம் தொடர்பான ரகசியங்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் இளைஞர் கசியவிட்டாரா என்பது குறித்து அவரிடம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை உள்ளூர் போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : மத்திய பிரதேசத்தில் பற்றி எரியும் பட்டாசு ஆலை; 6 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!