டெல்லி: கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தவருக்கு வழங்கப்பட்ட சான்ட்விச்சில் நட், போல்ட் இருந்துள்ளது. ஆனால் விமான பயணி பயணத்தின் போது புகார் அளிக்காமல் தனது பயணத்தை முடித்த பிறகு அந்த சான்விச்சுடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகார் குறித்து இண்டிகோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிக்கு அளிக்கப்பட்ட சான்tவிச்சில் நட், போல்ட் இருந்ததாகப் பயணி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பயணம் செய்த போது இந்த பிரச்சினை குறித்து புகார் அளிக்கவில்லை.
நாங்கள் விமானத்தில் பயணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சமையல் நிபுணர்களால் செய்யப்பட்ட தரமான மற்றும் சுத்தமான உணவுகளை வழங்குகிறோம். நாங்கள் செய்த தவறுக்கு வருந்துகிறோம்” எனக் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் 29ஆம் தேதி டெல்லியிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் பயணிக்கு அளிக்கப்பட்ட சான்ட்விச்சில் புழு இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இண்டிகோ விமான நிறுவனம் அந்த பயணியிடம் மன்னிப்பு கோரியது. மேலும் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தேசிய உணவு பாதுகாப்புத் துறை தரமில்லாத உணவு வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் ஜனவரி 16ஆம் தேதி உணவு பாதுகாப்புத்துறை விமான கேட்டரிங் துறையில் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பீடு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் பிரபல விமான கேட்டரிங் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையும் படிங்க: டெல்லி சலோ; விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!