புதுடெல்லி: ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை தெருவில் நிறுத்தாமல் உரிய அவகாசம் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், குற்ற வழக்கில் சிக்கியவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படும் விவகாரத்தில் மத, சமூக பின்னணியைப் பாராமல் பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சாலைகள், நீர்நிலைகள் அல்லது ரயில் வழித்தடங்களில் மத ரீதியான அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதை காட்டிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
புல்டோசர் நடவடிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாகப் பொருந்தும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய உச்சநீதிமன்றம், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை மீண்டும் உறுதிபட சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தகர்க்கப்படுகின்றன. இந்த நடைமுறையானது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: அடர் பனி பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்: 56 ஆண்டுகளுக்கு பிறகு 4 வீரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் மேற்கண்ட கருத்துகளை தெரிவித்தனர். மேலும், விசாரணையின்போது நீதிபதி கவாய் கூறுகையில், "கோயிலாக இருந்தாலும் சரி அல்லது தர்காவாக இருந்தாலும் சரி அல்லது குருத்வாராவாக இருந்தாலும் சரி... பொது மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்." என்றார்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என நிரூபிக்கப்பட்டாலும், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதி விஸ்வநாதன் கூறுகையில், "முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் விடப்படுவது நல்லதல்ல" என்றார்.
அப்போது, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக புல்டோசர் நடவடிக்கை நியாயமாகாது. கற்பழிப்பு அல்லது பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு கூட புல்டோசர் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
இவ்வாறு வழக்கு விசாரணை நடைபெற்றது.
முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 17ம் தேதி அன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டில் சொத்துகளை இடிப்பது நடக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
பொது சாலைகள், நடைபாதைகள், ரயில் வழித்தடங்கள் அல்லது பிற பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது. நிலம் தொடர்பான நகராட்சி சட்டங்களின் கீழ் சொத்துகளை எப்போது, எப்படி இடிக்கலாம் என்பது குறித்த உத்தரவுகளை வகுப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்