டெல்லி: ஜாஃபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகவும், கடத்தல் மூலம் சம்பாதித்த பல கோடி ரூபாய் பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானவேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப் பொருளை கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருட்களைத் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, இந்த போதைப் பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பதும், ஜாஃபர் சாதிக் அவரின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து, போதைப் பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை மண்டல போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். அதனிடையே ஜாஃபர் சாதிக் தலைமறைவான நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டிற்கு சென்ற மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பூட்டுப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மூன்று மாடிக் கொண்ட வீட்டை முழுவதுமாக சோதனையில் செய்தனர்.
இதனிடையே, 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானவேஸ்வர் சிங் கூறியவதாவது, "போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜாஃபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று டெல்லியில் பதுங்கியிருந்த ஜாஃபர் சாதிக்கை கைது செய்தோம். டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து அதனை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் முதலீடு செய்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு மேலும் பல தகவல்கள் தெரியவரும்" இவ்வாறு கூறினார்.