ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபேரா பேகம். இவரது மகள் சபா பேகம் தனது கணவர் அலி ஹுசைன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சவுதி அரேபியாவில் தங்கி உள்ளார். திருமணத்தின் போது வரதட்சனையாக பேசிய தங்கத்தை சபா பேகத்தின் குடும்பத்தினர் வழங்கத் தவறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அலி ஹுசைன், சபா பேகத்தை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அலி ஹுசைன் வங்கதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 20 ஆயிரம் ரியால் பணம் கொடுத்து 3 மாத விசாவில் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
சபா பேகம், மூன்று குழந்தைகள், வங்கதேசத்தை சேர்ந்த சிறுமி உள்ளிட்டோரை வீட்டை விட்டு வெளியேறாத படி வீட்டுச் சிறையில் அலி ஹுசைன் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டுச் சிறையில் இருந்து மூன்று குழந்தைகள், வங்கதேச சிறுமி ஆகியோரை கூட்டிக் கொண்டு தப்பித்த சபா பேகம், மக்கா நகரில் இருந்து ஜெட்டா நகருக்கு தப்பித்து அங்கு உள்ள ஒரு விடுதியில் தஞ்சமடைந்து உள்ளதாக தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதி உள்ள சபேரா பேகம் சவுதி அரேபியாவில் சிக்கி உள்ள தனது மகள் மற்றும் அவரது குழந்தைகளை ஐதராபாத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் தனது மகளை தொடர்பு கொண்டதாகவும், செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேச உள்ளதாகவும் சபேரா பேகம் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த மஜ்லிஸ் பச்சாவோ தெஹ்ரீக் கட்சி நிர்வாகி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் கணவரின் பிடியில் சிக்கிக் கொண்ட மகள் மற்றும் பேரக் குழந்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அமைச்சருக்கு பெண் கடிதம் எழுதி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் தலை விரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! மூடு நிலையை எதிர்கொள்ளும் தொழில்நிறுவனங்கள்!