கவர்தா: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தாவில் உள்ள செம்ஹாரா என்ற கிராமத்தில் பைகா பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் டெண்டு இலைகளை பறித்து விற்பனை செய்வதை பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று செம்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த பைகா பழங்குடியினர் பலர் டெண்டு இலை பறிப்பதற்காக காட்டுக்கு சென்றனர்.
பின்னர் இலைகளை பறித்துவிட்டு சுமார் 40 பேர் பிக்கப் வாகனம் மூலம் கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த வாகனம் குக்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்பானி கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிராம மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கோர விபத்தில் 17 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் இதேபோல கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று கும்ஹாரி என்ற பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 25 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 4 பேர் கைது!