புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த விமானநிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறை மிரட்டல் வந்தபோதும் அதனை அலட்சியப்படுத்தாமல் பாதுகாப்பு முகமைகளின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இத்தகையை மிரட்டல்கள் புரளியானவை என்று தெரியவந்துள்ளது. இதுவரை 250க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இது போல தொடர் மிரட்டல்கள் வந்ததையடுத்து விமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் கே ராம்மோகன் நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். வெடிகுண்டு புரளிகளை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
எனினும் கூட இன்றும் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகிய விமானநிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 14 விமானங்களுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இத்தகையை வெடிகுண்டு மிரட்டல்களால் வெடிகுண்டு சோதனைகள் காரணமாக விமானங்கள் தாமதமாக கிளம்புகின்றன. இதனால் விமானப் பயணிகள் உரிய நேரத்துக்கு தங்களின் பயணத்தை திட்டமிட முடியவில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்