ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் உத்தர பிரதேச மாநில எல்லையில் அமைந்து உள்ள மணிகா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.12) பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு ஒன்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். விளையாடிக் கொண்டு இருந்த போது சரியாக மூடாத ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாநில பேரிடர் மீட்புப் படையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணறி 70 அடி ஆழம் எனக் கூறப்படும் நிலையில் ஏறத்தாழ 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.
குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. ஏறத்தாழ இரண்டு நாட்கள் நடந்த மீட்பு பணியில் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறு குறுகிய வடிவில் இருந்ததாலும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போதும் சிறுவனிடம் இருந்து எந்த வித அசைவும் இன்றி காணப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரதீபா பல் தெரிவித்து உள்ளார்.
குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு அருகில் பள்ளம் தோண்டி மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : "மோடியின் உத்தரவாதம்...." புல்லட் ரயில் முதல் இ-ஷ்ரம் போர்ட்டல் வரை... பாஜக தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? - Lok Sabha Election 2024