ஐதராபாத்: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன்.4) நிறைவு பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் அக்கட்சி 240 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 32 தொகுதிகளை கோட்டை விட்டது.
அதேநேரம், 2019 மக்களவை தேர்தலை காட்டிலும் 2024 மக்களவை தேர்தலில் இரண்டு மடங்கு கூடுதலாக காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 543 மக்களவை தொகுதியில் 78 இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் 24 பேர் வெற்றி பெற்றனர். குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருமான யூசுப் பதான் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் யூசுப் பதான் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அதேபோல், சஹாரன்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கைரானாவைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் இக்ரா சவுத்ரி, பாஜக வேட்பாளர் பிரதீப் குமாரை விட 69,116 வாக்குகள் கூட பெற்று வெற்றி பெற்றார்.
AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் தொகுதியில் 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜாக வேட்பாளர் மாதவி லதா கொம்பெல்லாவை வீழ்த்தினார். அதேபோல் காஜிபூர் தொகுதியில் அப்சல் அன்சாரி 5.3 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 4.7 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முஹம்மது ஹனீபா 27,862 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா 4,81,503 வாக்குகள் பெற்றும், ஜியா உர் ரஹ்மான் சம்பாலில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறது. பீகார் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவுட பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மோடி அமைச்சரவையில் 7 அமைச்சர்கள், 21 எம்பிக்கள் படுதோல்வி! உபியை உலுக்கிய டபுள் என்ஜின் அரசு! - UP Lok Sabha Election Results 2024