டெல்லி: 18வது மக்களவைத் தேர்தலையொட்டி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், மூத்த குடிமக்கள், முதல்முறை வாக்காளர்கள் என பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆர்வமுடன் ஆற்றினர்.
அதேநேரம், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, வி.கே.பாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மகேந்திர சிங் தோனி, கவுதம் கம்பீர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
இவ்வாறு விறுவிறுப்பாக நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவில் இரவு 07.45 மணி நிலவரப்படி மொத்தம் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில்,
- பீகார் - 53.30 சதவீதம் (8 தொகுதிகள்)
- ஹரியானா - 58.37 சதவீதம் (10 தொகுதிகள்)
- ஜார்கண்ட் - 53.74 சதவீதம் (4 தொகுதிகள்)
- ஜம்மு மற்றும் காஷ்மீர் - 52.28 சதவீதம் (1 தொகுதி)
- டெல்லி - 54.48 சதவீதம் (7 தொகுதிகள்)
- ஒடிசா - 60.07 சதவீதம் (6 மக்களவை மற்றும் 42 சட்டமன்றத் தொகுதிகள்)
- உத்தரப்பிரதேசம் - 54.03 சதவீதம் (14 தொகுதிகள்)
- மேற்கு வங்கம் - 78.19 சதவீதம் (8 தொகுதிகள்)
இவ்வாறாக இதுவரை நடைபெற்றுள்ள 6 கட்ட வாக்குப்பதிவின்படி மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு முழுமை பெற்றுள்ளது. இதன்படி, 486 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
அதேநேரம், ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் மற்றும் 108 ஒடிசா சட்டமன்றத் தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், இறுதியாக 57 மக்களவைத் தொகுதிகளில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: "நான் மனித பிறவியே இல்லை; கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பரபரப்பு கருத்து! - Narendra Modi