பன்னா: மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா பகுதியைச் சேர்ந்த ராஜூ கட் என்பவர் 250 ரூபாய் முதலீட்டில் கடந்த மே மாதம் 24ஆம் தேதி மாநில அரசிடம் இருந்து வைர சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலும் கடினமாக உழைத்த ராஜூ கட்டுக்கு கை மேல் பலனாக வைரக்கல் கிடைத்து உள்ளது.
சுரங்கத்தில் கிடைத்த வைரக் கல்லை மாவட்ட நிர்வாகத்திடன் ராஜூ கட் ஒப்படைத்து உள்ளார். ராஜூ கட் கண்டுபிடித்த வைரம் 19.22 கேரட் கொண்டதாகவும் சந்தை மதிப்பின் படி ஏறத்தாழ 1 கோடி ரூபாய் வரை மதிக்கத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நடைபெற உள்ள அரசு ஏலத்தில் வைரக்கல் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வைரத்திற்கான சான்றிதழை ராஜூ கட்டிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். ஏலத்தில் வைரம் விற்பனையானதும் 12 சதவீதம் வரி மற்றும் 1 சதவீதம் டிடிஎஸ் கழிப்புக்கு பின்னர் ஏறத்தாழ 80 லட்ச ரூபாய் வரை ராஜூ கட்டின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வைர ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தை தனது குடும்ப வறுமையை போக்கவும் தனது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ராஜூ கட் தெரிவித்துள்ளார். மேலும், கிருஷ்ணா கல்யாண்பூர் சுரங்கத்தில் வைரக் கல் கண்டுபிடிக்கப்பட்டதும் மகிழ்ச்சியடைந்ததாகவும், அதை கண்டுபிடித்த உடனே அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததாகவும் ராஜூ கட் கூறினார்.
இதையும் படிங்க: கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து மனு! எம்பி பதவி பறிபோகுமா? - MP Kangana Ranaut