கொச்சி : கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் (வயது 33), ஆப்கானிஸ்தான் சென்று பயஙகரவாத குழுவில் இணைந்து தீவிரவாத பயிற்சி பெற்று உள்ளார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 253 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஷக்ரன் அசிமின் பின் தொடர்பாளராக ரியாஸ் அபூபக்கர் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று கேரளாவிலும் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய நிலையில், ரியாஸ் அபூபக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் ரியாஸ் அபூபக்கரை 18வது குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 15 இளைஞர்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இளைஞர்களுக்கு ஷக்ரன் அசிமின் வீடியோக்களை போட்டு காண்பித்து மூளைச் சலவை செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ரியாஸ் அபூபக்கர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ரியாஸ் அபூபக்கரை குற்றவாளி அறிவித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 38 மற்றும் 39களின் கீழ் நீதிபதிகள் சிறைத் தண்டனை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் வழக்கு விசாரணையின் போது ஏறத்தாழ 5 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால், தண்டனை அறிவிப்பில் அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ரியாஸ் அபூபக்கர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வழங்க உள்ளனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் தேர்தல் பணி காவலர்கள் மீது தாக்குதல் - 4 போலீசார், 30 பேர் பலி! என்ன நடந்தது?