வயநாடு: கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில், அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தன்னார்வலர்கள் குழு என பலரும் தொடர்ந்து 6வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்பெட்டா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரு தாய் மற்றும் அவரது நான்கு வயது குழந்தையுடன் உதவி நாடி சுற்றித்திரிந்துள்ளார்.
இதனைக் கண்ட வனத்துறை அதிகாரி அந்த பெண்ணையும் குழந்தையையும் மீட்டு விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் வயநாட்டின் பணியா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது மற்ற மூன்று குழந்தைகள் மற்றும் அவரின் கணவர் உணவின்றி, மலை உச்சியில் உள்ள குகை ஒன்றில் சிக்கித் தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, கல்பெட்டா வனச்சரக வன அலுவலர் கே.ஆஷிப் தலைமையிலான நான்குபேர் கொண்ட குழு ஒன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி மலை உச்சியில் சிக்கியிருந்து அந்த பெண்ணின் குடும்பத்தை மீட்பதற்கு வனப்பகுதிக்குள் ஆபத்தான வழுக்குப் பாறைகள் நிறைந்த, சுமார் 7கி.மீ தூரம் கொண்ட மலையேற்றத்தை மேற்கொண்டனர்.
இந்த குழுவில் கல்பெட்டா வனச்சரக வன அலுவலர் கே.ஆஷிபுடன் சேர்த்து வன அலுவலர்கள் கே.அனில் குமார், பி.எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர்.டி வீரர் (Rapid Response Team) அனூப் தாமஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கேரள மாநில வனத் துறையினரின் 8மணி நேரத் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, ஐந்து நாள்களாகச் சாப்பிடுவதற்கூட வழியின்றி குகைக்குள் இருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணின் குழந்தைகள் மற்றும் கணவனைக் காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து வன அலுவலர் கே.ஆஷிப் கூறுகையில், "பெரும்பாலும், இந்தப் பழங்குடியின மக்கள் வெளி சமூகத்தினருடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். பொதுவாக காட்டில் விளையக்கூடிய பொருட்களை சேகரித்து உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்திவருகிறார்கள்.
தற்போது கன மழை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் அவர்களால் எந்த உணவுப்பொருளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நாங்கள் அவர்களை பார்த்தபோது, எங்களிடம் இருந்த உணவுப்பொருளை எல்லாம் அவர்களிடம் கொடுத்தோம். பிறகு அந்த நான்கு குழந்தைகளையும் தூரி கட்டுவதைப்போல, துணியால் கட்டிக்கொண்டுதான் கீழே அழைத்து வந்தோம்" என்று கூறினார்.
இதற்கிடையே, பழங்குடியினக் குழந்தைகளை காப்பாற்றிய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்தக் குழுவினருக்கு கேரளா மட்டுமின்றி, பல மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது 'X' வலைதளப்பக்கத்தில், அதிகாரி ஒருவர் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "நிலச்சரிவில் சிக்கிய வயநாட்டில் நமது துணிச்சலான வனத்துறை அதிகாரிகளின் 8 மணி நேர துரித நடவடிக்கையின் மூலம் தொலைதூர பழங்குடியின குடியிருப்பிலிருந்து ஆறு விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
அவர்களின் இந்த வீரச்செயல், தற்போது உள்ள இருள் கவிந்த துயரமான சூழலில், கேரளாவின் வெளிச்சக் கீற்றாக ஒளிரும்படி செய்திருக்கிறது. நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு நின்றால் நம்மால் மீண்டும் பழைய நிலைமையைக் கட்டியெழுப்ப முடியும்" என்று வனத்துறை அதிகாரிகளின் சவாலான முயற்சியை பாராட்டியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ விபத்து!