திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த தொடர் கனமழையால் வயநாடு மலைப்பகுதியில் உள்ள சூரல்மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட இதுவரை 249 பேர் உயிரிழந்தனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவம், தன்னார்வலர்கள் என ஏராளாமனோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையால், அவ்வப்போது மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த இயற்கை பேரிடர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள அரசு முன்னெச்சரிக்கையாக இருக்கவில்லை என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து ஆதாரமற்றது எனக் கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், " நிலச்சரிவு நிகழ்ந்துள்ள பகுதிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது. மேலும், 115 முதல் 204 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையில் இருந்தது. ஆனால், அப்பகுதியில் முதல் 24 மணி நேரத்திற்கு 200 மிமீ மழையும், அடுத்த 24 மணி நேரத்தில் 372 மிமீ மழை என கடந்த 48 மணி நேரத்தில் 572 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ரெட் அலர்ட் கூட வழங்கப்படவில்லை. இதனிடையே, சம்பவத்தன்று காலை (ஜூலை 30) தான் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது. அதுவும் பயங்கர நிலச்சரிவுக்குப் பிறகே வழங்கப்பட்டது. மேலும், வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கும் மத்திய நீர் ஆணையமும், ஜூலை 23 முதல் 29 வரை எந்தவித எச்சரிக்கையும் அளிக்கவில்லை.
தொடர்ந்து பேசிய அவர், நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை, அதற்கான நேரம் இதுவும் இல்லை. ஆனால், காலநிலை மாற்றத்தால் நம்முடைய சுற்றுச்சூழலில் இத்தகைய மாற்றும் ஏற்பட்டுள்ளதை மத்திய அரசு உணர்ந்து, அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது: முன்னதாக, மாநிலங்களவையில் கேரளாவில் நடந்த பயங்கர நிலச்சரிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, "கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர் குறித்து ஜூலை 23ஆம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அதே நாளில் ஒன்பது தேசிய பேரிடர் குழுவினரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தோம்.
இருப்பினும், கேரள அரசு முன்னெச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட்டும்கூட எச்சரிக்கையாக இருக்கவில்லை. தேசிய மீட்புப் படையினர் கேரளாவிற்கு வந்தவுடனே கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இழப்புகளைக் குறைத்திருக்கலாம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தோம்..” - வயநாடு நிலச்சரிவு குறித்து அமித் ஷா மாநிலங்களவையில் பேச்சு!