பெங்களூரு : கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிக்ரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதாவின் படி மாநிலத்தில் சிக்ரெட் விற்பனைக்கான வயதை 18ல் இருந்து 21 வயதாக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மசோதா அவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21ஆக விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, அவையில் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இந்த மசோதாவின் மூலம் மாநிலத்தில் 21 வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்படுவதாக கூறினார்.
மேலும், பள்ளிகள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் சிகரெட் விற்க கூடாது என்றும் அதேநேரம் மளிகை பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகளும் சிக்ரெட் விற்பனையில் ஈடுபடுவதால் விதிமுறையை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளதாக தினேஷ் குண்டுராவ் கூறினார்.
முன்னதாக கர்நாடகாவில் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் ஹுக்கா பார்களுக்கு மாநில அரசு தடை விதித்து இருந்தது. மேலும், உத்தரவை மீறி ஹுக்கா பார் நடத்தும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறை சம்மன்!