பெங்களூரு: இன்றைய காலகட்டத்தில் பல உணவு பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்ததாகவே மாறி வருகிறது. ஆனால், வெறும் ருசிக்காக மட்டும் நாம் நச்சுத்தன்மையை மறந்து, அதனை உண்டு மகிழ்ந்து வருகின்றோம்.
அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் ஒன்று பஞ்சு மிட்டாய். இதில் நிறமூட்டுவதற்காக ரோடமின் - பி எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும் அளவிற்கு ஆபத்தானது என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது.
இந்த ஆய்வை அடுத்து, தமிழக அரசு பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட நிறமூட்டும் மிட்டாய் வகைகளுக்கு சமீபத்தில் தடை விதித்தது. இந்த நிலையில், கர்நாடக அரசும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரோடமின் - பி பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது. மேலும், ரோடமின் - பி என்ற நிறமூட்டிக்கு முழுமையாக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகள் சேரிக்கப்பட்டன. அதில் 107 மாதிரிகள் செயற்கை நிறங்கள் கொண்ட ஆபத்தான மாதிரிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் சேகரிக்கப்பட்ட 25 பஞ்சு மிட்டாய் மாதிரிகளில், 15 மாதிரிகள் செயற்கை நிறங்கள் கொண்ட பாதுகாப்பற்ற மாதிரிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பற்ற மாதிரிகளில் டார்ட்ராசைன் (Tartrazine), சன்செட் யெல்லோ (Sunset yellow) மற்றும் கார்மோசைன் (Carmoisine), ரோடமின் - பி (Rhodamine - B) போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!