மேகாலயா: நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்தவர். கோவையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, கடந்த 1986ஆம் ஆண்டு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் ஆனார். ரிட் மற்றும் சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்கும் வைத்தியநாதன், 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து, 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். இந்நிலையில், கடந்த 2023 மே 24ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதனை, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்தார்.
அதைத் தொடர்ந்து, மே 25ஆம் தேதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, இவர் இப்பொறுப்பினை வகிப்பார் எனவும் கூறப்பட்டது. பின்னர், வைத்தியநாதன் சில நாட்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
அதைத் தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான வைத்தியநாதனை, அங்கு நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து, கொலிஜியம் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு இன்று (பிப்.11) ஷில்லாங்கில் உள்ள ராஜ்பவன் தர்பார் ஹாலில், மேகாலயா ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா.. ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்த திட்டமா?