ஜம்மு: ஜம்முவின் அக்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ் நகோத்ரா. கடந்த ஜூன் 11ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஹர்ஷ் நகோத்ராவை மீட்டுத் தரக் கோரி அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஹர்ஷ் நகோத்ராவின் சிம் கார்டை மீண்டும் அவரது பெற்றோர் இயக்கி உள்ளனர்.
அப்போது ஹர்ஷ் நகோத்ராவின் தந்தை சுபாஷ் சர்மாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அதில், ஹர்ஷ் நகோத்ராவின் சடலம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் கால்வாயில் கிடைத்ததாகவும், சடலத்தை பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஹர்ஷ் நகோத்ரா, அதில் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் செனாப் நதியில் குதித்து உயிரை மாய்த்துள்ளார். செனாப் நதியில் விழுந்த ஹர்ஷ் நகோத்ராவின் உடல் மெல்ல பாகிஸ்தானில் கரை ஒதுங்கியுள்ளது.
சியால்கோட் கால்வாயில் கரை ஒதுங்கிய ஹர்ஷ் நகோத்ராவின் சடலத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டு புதைத்தனர். மேலும் ஹர்ஷ் நகோத்ராவின் உடலுடன் அடித்து வரப்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய நிலையில், உயிரிழந்தது அவர் தான் என உறவினர் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் புதைக்கப்பட்ட தங்களது மகனின் சடலத்தை மீட்டு மீண்டும் இந்திய கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நகோத்ரா குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், பாகிஸ்தான் அரசு ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஹர்ஷ் நகோத்ராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தங்களது மகனின் சடலத்தை சொந்த நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் புதைக்கப்பட்ட தங்களது மகனுக்கு தங்கள் முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்ய விரும்புவதாக நகோத்ராவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிதி ஆயோக் வளர்ச்சிக் குறியீடு அறிக்கை வெளியீடு - தமிழ்நாட்டுக்கு எந்த இடம்? - niti aayog sdg index 2024