டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தட்டா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாகவும், அரசு சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திடுவதும் குறித்தும் வரும் செவ்வாய்க்கிழமை (மே.7) தயாராக வருமாறு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி ராஜூவிடம் தெரிவித்தனர்.
மேலும், மக்களவை தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு குறித்து மே 7ஆம் தேதி பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதே வழக்கில் சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட கருத்துகளை மேற்கொள் காட்டி, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பண மோசடி விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படலாம் அல்லது வழங்கப்படமலும் இருக்கலாம் என்றும் அது குறித்து மே 7ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றார். அதேநேரம் மக்களவை தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் அதுகுறித்த நிபந்தனைகள் பற்றி அறிவுறுத்திமாறு கூறிய நீதிபதிகள், இடைக்கால ஜாமீன் குறித்த அம்சங்களும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் கூட போகலாம் அது குறித்த தங்களால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து எந்த யூகங்களையும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். முன்னதாக தலைநகர் டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் அரசுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்! சோனியா, பிரியங்கா காந்தி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்! - Rahul File Nomination In Rae Bareli