ஆந்திரப் பிரதேசம்: விண்வெளி ஆராய்ச்சியில் கண்ணிமைக்கும் வேகத்தில் அடுத்தடுத்து வெற்றியைப் பதித்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். விண்வெளித் துறையில் கடந்தாண்டு (2023) எந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் கண்டிராத முகத்தைப் பெற்றது இஸ்ரோ. இஸ்ரோவின் சாதனை ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றியாக கொண்டாடப்பட்டது.
-
#GSLVF14 has lifted off from the Second Launch Pad at 5:35 pm IST! 🚀 #ISRO pic.twitter.com/hJrH4Fn6Zo
— ISRO Spaceflight (@ISROSpaceflight) February 17, 2024
அந்த வகையில், நிலவின் தென் துருவத்திற்குச் சந்திரயான் - 3, சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல்-1 என்ற வரிசையில் தற்போது, வானிலை மாறுபடுதல் குறித்த துல்லிய விவரங்களுக்காக களம் காண்கிறது இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள்.
இன்சாட் - 3டிஎஸ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று 5.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 27 மணிநேர கவுண்டவுன் நேற்று (பிப்.16) பிற்பகல் 2.05 மணிக்குத் துவங்கப்பட்டது. இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி (GSLV) ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மேலும், இந்த இன்சாட் - 3டிஎஸ், முன்னதாக விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் - 3டி மற்றும் இன்சாட் - 3டிஆர் ஆகிய செயற்கைக்கோளின் தொடர்ச்சியாகும். இந்த செயற்கைக்கோள் geo synchronous transfer orbitல் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமாற்றத்தின் ஆய்வில் துல்லியமான தகவல்கள் பெறுவதற்கும், புவி ஆய்வுகளைப் பெறுவதற்கும் பெரும்பாலும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களே பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 51.7மீ உயரத்தில், 420டன் எடை கொண்ட இந்த ரக ராக்கெட்டின் முதல் நிலையில் திட உந்துசக்தி மோட்டாரும், இரண்டாம் நிலையில் உந்து சக்தியுடன் கூடிய எந்திரமும், மூன்றாவது நிலையில் ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு என மொத்தம் மூன்று நிலைகளுடன் இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாகக் கிளம்பியது.
2ஆயிரத்து 275கி எடை கொண்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளில் மொத்தம் 6 இமேசிங் சேனல்கள் மற்றும் 25 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வானிலை மற்றும் புவியின் பருவநிலை மாறுபடுதல் குறித்து வெகு விரைவாகவும் துல்லியமாகவும் அறியலாம் என இஸ்ரோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இன்சாட் - 3டிஎஸ் எந்த மாநிலத்திற்கு முதன்மையாகுமோ இல்லையோ தமிழகத்தில் பெறும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்றளவும் தவித்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக அரசு தரப்பில் குறிப்பிட்ட காரணம் என்று பார்க்கையில், சரியான வானிலை தகவல்கள் வழங்கப்படவில்லை என்றே முன்வைக்கப்பட்டது. தற்போது, இந்த சூழலை மாற்றி அமைக்கும் வகையில் இன்சாட் - 3டிஎஸ் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று மாலை விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள்!