டெல்லி: சீக்கியர்களின் புத்தாண்டான கல்சா (வைசாக்கி), கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கனடா தலைநகர் டொரண்டோவில் பொதுக்கூட்டம் மற்றும் பிரமாண்ட பேரணியை சீக்கியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவர், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், டொரண்டோ மேயர் ஒலிவியா சோவ் மற்றும் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். அப்போது, சீக்கிய சமூகத்தினர் மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உரையாற்ற வந்த நிலையில், கூட்டத்தில் இருந்த சிலர் 'காலிஸ்தான்' ஆதரவு கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், "கனடா முழுவதும் உள்ள ஏறத்தாழ 8 லட்சம் சீக்கியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க, எங்கள் அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும். சீக்கிய சமூகத்தை, வெறுப்பு மற்றும் பாகுபாட்டில் இருந்து நாங்கள் காப்போம்" என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, 'காலிஸ்தான் வாழ்க' என முழங்கிய தொடர் ஆதரவு கோஷங்கள், இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கனடா அரசாங்கத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, அந்நாட்டு துணைத் தூதா் ஸ்டீவா்ட் வீலருக்கு இந்தியா நேற்று (திங்கட்கிழமை) சம்மன் அனுப்பியது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடா பிரதமர் பங்கேற்று உரையாற்றிய நிகழ்ச்சியில், 'காலிஸ்தான்' பிரிவினைவாத முழக்கங்கள் எழுப்பப்பட்டது தொடர்பாக, கனடாவின் துணைத் தூதர் ஸ்டீவா்ட் வீலருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தடையின்றி தொடர்ந்து நடந்தது, பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு, கனடா அரசியல் ரீதியில் இடமளித்திருப்பதை உறுதி செய்கிறது. இந்த தொடர் வெளிப்பாடு இந்தியா - கனடா உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, கனடாவின் சொந்த குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வன்முறை மற்றும் குற்றச் சூழலை ஊக்குவிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 2 சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல்: 3 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை - POCSO CASE