டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (ஜூன்.4) மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரவு 7 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 240 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் நிலையில், ஆட்சி அமைக்கும் முடிவில் இந்தியா கூட்டணி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அதேநேரம் பாஜக தனித்து 239 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று உள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளையே பாஜக பெரிதும் நம்பியுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 14 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால், பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என காங்கிரஸ் கணிப்புகள் கூறுகின்றன.
அதை கருத்தில் கொண்டு, சந்திரபாபு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர பிரதேசம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணியாக இருந்த பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரை மீண்டும் இந்தியா கூட்டணியில் இணைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின் போது இந்தியா கூட்டணியில் இணைந்தால் நிதிஷ் குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதி அளித்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
இதனிடையே நிதிஷ் குமார் பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரியை சந்திப்பதை தவிர்த்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதகா பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சரவை பொறுப்பு கொடுக்க உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கூட்டணி கட்சிகளுடன் அலோசனைக்கு பின் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு"- ராகுல் காந்தி! - Lok Sabha Election Results 2024