டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜூலை.23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சமான பட்ஜெட் என இந்திய கூட்டணி கட்சிகள் தெரிவித்து இருந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று (ஜூலை.24) காலை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | Delhi | Leaders of INDIA bloc protest against 'discriminatory' Union Budget 2024, demand equal treatment to all States, in Parliament pic.twitter.com/c6uOyF1TQr
— ANI (@ANI) July 24, 2024
காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் திரண்ட இந்திய கூட்டணி கட்சி எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை என எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். தமிழ்நாடும் இல்லை, திருக்குறளும் இல்லை என எழுதிய பதாகைகளை சுமந்து கொண்டு திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இரு மாநிலங்களைத் தவிர மக்களுக்கான பட்ஜெட் இது அல்ல என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடியில் தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.