டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் உருவாக்கப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இந்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த் வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கர் தட்டா ஆகியோர் அமர்வில் வழக்கு மீண்டு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு அளவீடு செய்யப்படுகிறது, எந்த நிலையில் வேட்பாளர் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்ய கோரலாம், இயந்திரத்தில் சேதம் ஏற்படாமல் இருப்பதற்கான என்ன உத்தரவாதம், சிப்களில் மாற்றம் மற்றும் தரவுகளை எவ்வாறு மீண்டும் மீட்டெடுப்பது குறித்து விளக்குமாறு கோரினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், இது தொடர்பாக அறிக்கை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய நீதிபதி திபாங்கர் தட்டா, வழக்கறிஞர் அல்லது துணை ஆணையார் என யாராக இருந்தாலும், தேர்தல் தொடர்பான மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், இதுவும் தேர்தல் செயல் முறையின் ஒரு அங்கம் என்பதால் புனிதத் தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கேரளா மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு ஒரு ஓட்டு செலுத்திய போது இறுதியில் இரண்டு ஓட்டுகளாக மாறியதாகவும், அடுத்தடுத்து 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோன்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஜெர்மனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறும் என்பதை கருதி மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியதாகவும், அதன்படி இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையிட்டார்.
அல்லது வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் உருவாகும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டுகளை தனியாக ஒரு பெட்டியில் வாக்காளர்களை போட வைத்து அதை வாக்கு எண்ணிக்கை நாளில் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வைக்கலாம் என்றும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா? - Lok Sabha Election 2024