டெல்லி: மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இன்று (ஏப்.26) இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, அசாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 36.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதைத் தொடர்ந்து நக்சல்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சத்தீஸ்கரில் 35.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அசாமில் 27.43 சதவீதம், பீகாரில் 21.68 சதவீதம், ஜம்மு & காஷ்மீரில் 26.61 சதவீதம், கர்நாடகாவில் 22.34 சதவீதம், கேரளாவில் 25.61 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 28.15 சதவீதம், ராஜஸ்தானில் 26.84 சதவீதம், மற்றும் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 24.31 சதவீதம் காலை 11 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கடும் வெப்பம் காரணமாக பீகாரில் உள்ள பங்கா, மாதேபுரா, ககாரியா மற்றும் முங்கர் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 1,202 வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் நிலையில் 34 லட்சத்து 8 ஆயிரம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மேலும், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3 கோடியே 28 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
நாடு முழுவது 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் வழக்கு: அனைத்து மனுக்களும் தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுவது என்ன? - EVM VVPAT Machine Case