அமராவதி: கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்கியுள்ள விடுதியின் கழிவறையில் இருந்து ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த சம்பவத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதே கல்லூரியில் பி.டெக் படிக்கும் மாணவர் ஒருவர், இந்த கேமராவை பொருத்தியதை கண்டிபிடித்த மாணவ, மாணவிகள் அவர் தங்கியுள்ள விடுதி அறைக்கு சென்று அவரை தாக்கியதோடு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்களை பறித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை கூறி, அந்த மாணவனை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறுதியாண்டு படிக்கும் மாணவரான அவர், ரகசிய கேமரா மூலம் பெண்கள் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதனை வெளிநாட்டில் உள்ள இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகப்படும் மற்றொரு மாணவர் மற்றும் அவரது பெண் தோழி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா தொடர்பான புகார் ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் வந்தபோதிலும், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ராஜ்யசபா எம்பிக்கள் 8 பேர் ராஜினாமா? - ஜெகன் மோகனுக்கு அடுத்த அதிர்ச்சி..!